தமிழ்நாட்டில் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சி இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்பட முடியும். இரு நாடுகளுக்கும் இடையில் இந்து சமய உறவுகள் இருந்ததற்கான ஆதாரமாக இலங்கை வடமாகாணத்தில் அமைந்துள்ள திருக்கேதீசுவரம் பற்றிய பக்தி பாடல் ஒன்றும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் கோயிலைப் பற்றிய பக்தி பாடல் ஒன்றும் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டுள்ளமையை கூறலாம்.
தமிழ் பௌத்தத்தின் வீழ்ச்சிக்கு இது போன்ற பாடல்கள்தான் காரணமாக அமைந்தன என்று கூறப்பட்ட போதும், யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி இலங்கைத் தீவு முழுவதும் தமிழ் பௌத்தத்தின் வீழ்ச்சிக்கும் இது காரணமாக அமைந்தது. சிவதர்ம போதனையை செய்ய முனைந்தவர்கள் அனைவரிலும் மாணிக்க வாசகர் சுவாமிகள் என்பவரே ஈழத்தில் இந்து தர்மம் மேலெழுந்து வர மூல காரணமாக இருந்தவராகும் என்று கூற முடியும்.
பாளி மரபுப்படி சோழர்கள் பௌத்தத்தின் எதிரிகள். ஆனால் 'சோழர்கால பௌத்தம்' என்றொரு கருத்து இருந்ததைக் குறிப்பிடத்தான் வேண்டும். இங்கு சோழர்கள் பௌத்த சமய அனுசரணையாளர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இராஜராஜன் என்ற சோழ மன்னன் ஒரு புத்த கோவிலுக்கு தன் பெயரை வைத்திருக்கலாம் என்று நினைப்பதற்கான காரணங்கள் உள்ளன. அவரது பெரும் கோயில் திட்டமான தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட சிவன் கோவிலுக்கு எவ்வாறு 'ராஜராஜேஸ்வரம்' என்று பெயர் சூட்டினானோ அதேபோல் திருகோணமலை சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள பௌத்த விகாரைக்கு 'இராஜராஜப்பெரும்பள்ளி' என்று பெயர் வைக்க இணக்கம் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.