இன்றைய நிர்வாகப் பிரிவுகளின் படி, திருக்கோணமலை மாவட்டத்தின் மூதூர், சேறுவில், வெருகல் பிரதேசங்களும், அம்பாறை மாவட்டத்தின் தெகியத்தகண்டி, தவிர்ந்த ஏனைய நிர்வாகப் பிரதேசங்களும் முழு மட்டக்களப்பு மாவட்டமும் கீழைக்கரையில் அடங்கும். இந்த எல்லைகளின் அடிப்படையில், சுமார் 9000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட கீழைக்கரையானது, முழு இலங்கையின் பரப்பில் சுமார் 15%ஐ அடக்குகிறது. தமிழர், சோனகர், சிங்களவர் ஆகிய மூவினத்தார் இங்கு பரந்து வாழ்ந்துவருகின்றனர்.
கீழைக்கரைக்கு இயற்கையாகவே தனித்துவமான புவியியல் தரைத்தோற்ற அமைப்பு அமைந்திருக்கிறது. அந்த அமைப்பே இங்கு குடியேறிய பல்வேறு பண்பாடுகளையும் பல்வேறு மொழிகளையும் மதங்களையும் கொண்ட மக்களை ஒன்றுதிரட்டி, ஒற்றைப்பண்பாடாக மாற்றி இருக்கிறது.
இந்த புவியியல் சிறப்பம்சங்களில் இரண்டு மிகவும் முனைப்பானவை.முதலாவது, மூதூரிலிருந்து பொத்துவிலூடாக கூமுனை வரை கணிசமான எண்ணிக்கையில் களப்புகளைக் கொண்ட அதன் சமதரை அமைப்பு. இரண்டாவது சிறப்பு, இந்நிலப்பரப்பு முழுவதும் கடலுக்கு சமாந்தரமாக நிலத்தில் நீளவாக்கில் அமைந்துள்ள நீர்நிலைகள்.
கீழைக்கரையெங்கணும் தொன்மையான குளங்களும் கால்வாய்களும் பெருமளவில் காணப்படுகின்றன. எனவே வாழ்தகைமைக்கான குறைந்தபட்சத் தேவைகளை நிறைவேற்றியபடி, இங்கு ஒரு காலத்தில் அடர்ந்து செறிந்து வாழ்ந்த பெரும் குடித்தொகை ஒன்று காணப்பட்டிருக்க வேண்டும். அது உண்மை என்பது போல், சிற்றாறுகளின் கரைகள், களப்புகளின் அயற்பகுதிகள் அவற்றினருகே அங்குமிங்கும் துண்டிக்கப்பட்டுள்ள மலைக்குன்றுச் சாரல்களிலேயே கீழைக்கரையின் தொல்நாகரிகம் உருவாகி வளர்ந்த பழங்குடியிருப்புகளை இன்று கண்டறியமுடிகின்றது.