எமது பாரம்பரிய உணவுப்பழக்கங்களில் எண்ணெய் வகைகளின் பாவனையானது மட்டுப்படுத்தியதொன்றாகவே இருந்து வந்துள்ளது. நாம் உட்கொள்ளும் உணவுகளில் தனியே கொழுப்பு உணவுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. சமையலின்போது எண்ணெய் வகைகளானது பொரித்தல், தாளித்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
மாப்போசணைக் கூறுகளில் ஒன்றான கொழுப்புச்சத்துக்கு, மாமிச உணவு உண்பவர்களாயினும் சரி, சைவ உணவு உண்பவர்களாயினும் சரி பெரிதும் தங்கியிருப்பது தேங்காய்ப்பால், பால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் என்பனவற்றில் ஆகும்.
காலப்போக்கில் வர்த்தக நோக்கில் எண்ணெய்களைச் சுத்திகரித்துக்கொள்ளும் (Refined) போதும், அதிக அளவில் உணவுகளில் உடலுக்கு ஒவ்வாத கொழுப்புக்களே (Trans fat - இது கெட்ட கொழுப்பினை (Low Density Lipoprotein) அதிகரிக்கும்) கிடைக்கின்றன.
தேங்காய் எண்ணெய் அதிகளவில் நிரம்பிய கொழுப்பமிலங்களைக் கொண்டிருப்பதினால் உடலுக்கு கேடுதரக்கூடிய கொழுப்புக்கள் உருவாகுவதில்லை. ஆனால் நாம் இன்று பாரம்பரியமாகச் சமையலுக்குப் பாவித்துவந்த தேங்காய் எண்ணெயை விட்டுவிட்டு கேடுதரக்கூடிய பாம் எண்ணெய் , மரக்கறி எண்ணெய் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தி வருகின்றோம். அதேவேளை தேவையான அளவைவிட அதிகளவில் பாவிக்கும்போது தேங்காய் எண்ணெயும் உடலுக்குக் கேடு விளைவிக்கும்.
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் என்பன எமது பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமானவை. அவற்றில் மருத்துவக் குணங்கள் அதிகமாக இருந்தாலும் அவற்றினை மிகையாகப் பயன்படுத்த வேண்டாம் என்றே சித்தமருத்துவம் கூறுகின்றது. மிகையாகப் பயன்படுத்தும்போது அவை உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என குறிப்பிடப்படுகின்றது.
நல்லெண்ணெய், உடலுக்கு இளமையையும் ஒளியையும் கொடுக்கும், கண்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும், கண்நோய்கள் மாறும். சுவாச தொடர்பான நோய்களும் மாறும்,புண்களில் ஏற்படும் வலியையும் சதை வளர்ச்சியையும் குறைக்கும்,அதிகரித்த கபமும், வாதமும் நீங்கி சிரசுக்கான இரத்தம் சீராகப்போக வழிசமைக்கும்.
இலுப்பை எண்ணெய் ஆனது தேங்காய் எண்ணையைப் போன்று நிரம்பிய கொழுப்பமிலங்களை அதிகம் கொண்டது. பாரம்பரியமாக இலுப்பை எண்ணெயை ஒரு தடவை அடுப்பிலேற்றி காய்ச்சிய பின்னரே பயன்படுத்தலாம்.
எண்ணெய் வகைகள் சரியான அளவில் பயன்படுத்தும் போது நன்மையைத் தரக்கூடியன. அதேபோல் அளவுக்கு அதிகமாகும்போது அதே அளவு தீமையைத் தரக்கூடியனவாகும்.